LATEST NEWS
நேபாள எல்லைப் பகுதியில் மாயமான சி.இ.ஓ லக்ஸ் கோபிசெட்டி…! திடீரென துண்டிக்கப்பட்ட தொடர்பு… இன்ஃபோசிஸ் உயர் அதிகாரியின் நிலை என்ன..? அரசு முகமைகளுடன் இணைந்து தொடரும் தேடுதல் வேட்டை..!!
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ்’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி லக்ஸ் கோபிசெட்டி என்பவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பொதுத்துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தும் இந்நிறுவனத்தின் தலைவரான கோபிசெட்டி, தனிப்பட்ட பயணமாக நேபாளப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது சக ஊழியரான லக்ஸ் கோபிசெட்டி தனிப்பட்ட முறையில் அங்குச் சென்றிருந்த நிலையில், தற்போது அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். அவரது பாதுகாப்பும் நல்வாழ்வுமே எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பை ஏற்படுத்தவும் தகவல்களைச் சேகரிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் மீட்பு முகமைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த கடினமான காலத்தில் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தின் காரணமாக 320-க்கும் மேற்பட்ட இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், நூற்றுக்கணக்கானோர் சீன எல்லையோரப் பகுதிகளில் சிக்கித் தவிப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள சூழ்நிலையில், லக்ஸ் கோபிசெட்டியைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
