LATEST NEWS
எப்போது இவரே கிங்..! அதிமுக, திமுக… இப்போது தவெக.. எந்த ஆட்சி வந்தாலும் தவிர்க்க முடியாத அதிகாரி… யார் இந்த ஜெ.ராதாகிருஷ்ணன்..??
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு முக்கியத் துறைப் பொறுப்புகளை வகித்த இவர், தற்போது தவெக ஆட்சியிலும் மிக முக்கியமான பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த மாத இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் நீடிக்கும் வகையில் இப்புதிய நியமனம் அமைந்துள்ளது.
1966-இல் பிறந்த ஜெ. ராதாகிருஷ்ணன், பெங்களூரில் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தவர். 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தன் பணியைத் தொடங்கிய இவர், தூத்துக்குடி துணை ஆட்சியர், நிதித் துறை துணைச் செயலர், சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் எனப் பல முக்கியப் பதவிகளை திறம்பட வகித்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் போது, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இவர் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்றன. குறிப்பாக நாகப்பட்டினத்தில் இவர் ஆற்றிய சுனாமி நிவாரண நடவடிக்கைகளை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் நேரில் வெகுவாகப் பாராட்டினார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெண் சிசுக் கொலையைத் தடுக்க இவர் எடுத்த தீவிர முயற்சிகளும் கவனத்தைப் பெற்றன.
2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தார். 2021-இல் திமுக அரசு அமைந்த பிறகும் கூட்டுறவுத் துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத் தலைவர் என முக்கிய பொறுப்புகளில் தொடர்ந்தார். மேலும், அரசுச் செய்திகளை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் செய்தித் தொடர்பாளராகவும் திமுக ஆட்சியில் செயல்பட்டார்.
அதன்பின்னர், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரியின் இயக்குநராக கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டார். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஓய்வு பெறவிருந்த நிலையிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் புதிய நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்ற உள்ளார்.
