LATEST NEWS
“இனி இங்க ரயில் பாதை சாத்தியமே இல்ல…” இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை… காகிதத்தோடே முடங்குகிறதா காத்மாண்டு – திபெத் ரயில் திட்டம்…? இயற்கையின் சீற்றத்தால் சீனாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு..!!!
நேபாளம் மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான ‘கியிரோங்’ எல்லை வர்த்தக மையம் முற்றிலுமாக அழிந்து பாழடைந்துள்ளது. இந்த இயற்கை பேரிடர் காரணமாகப் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், நேபாள நாட்டின் பொருளாதாரம் சுமார் 10 சதவீதம் வரை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு நேபாளத்தின் லாங்டாங் மலைப் பகுதியில் அமைந்திருந்த பனிப்பாறைகள் மற்றும் பாறைகள் திடீரெனச் சரிந்து விழுந்ததால் இந்த மாபெரும் ஆபத்து நேரிட்டது. இதனால் லெண்டே கோலா, போடேகோஷி மற்றும் திரிசூலி ஆகிய நதிகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளமும் சேறும் சகதியும், எல்லைப் பகுதியில் இருந்த சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் மற்றும் கட்டிடங்களை முற்றிலுமாக அடித்துச் சென்றன. சீன மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடங்களின் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியிருந்தன.
இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கு, சீன அரசு 2016-ல் முன்மொழிந்த இமயமலைப் பகுதிக்கான ‘பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்’ ரெயில் திட்டத்திற்குப் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தின் சிகாட்சே நகரில் இருந்து கியிரோங் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு வரை சுமார் 72 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது எல்லைப் பகுதியே நிலைகுலைந்துள்ளதால், காகித அளவிலேயே நிலுவையில் இருக்கும் இந்த ரெயில் திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. எனினும், நேபாள அரசு இத்திட்டத்தை முழுமையான மானிய உதவியாகவே சீனா வழங்க வேண்டும் என எதிர்பார்த்து வரும் சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் இயற்கைச் சீற்றங்கள் இத்திட்டத்தின் செயல்பாட்டையும் அதன் சாத்தியக்கூறுகளையும் பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளன.
