LATEST NEWS
“அடேங்கப்பா என்ன மனுஷன்யா இவர்…” சாதிக்க வறுமை தடையல்ல… 21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC பாஸ்..! கண்ணீர் சிந்து வைக்கும் அன்சார் ஷேக்கின் மாஸ் ஸ்டோரி..!!
மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள ஷெல்காவ் என்ற கிராமத்தில் 1994-ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று அன்சார் ஷேக் பிறந்தார். வறட்சியும் கடும் பொருளாதார நெருக்கடியும் நிறைந்த பகுதியில் வளர்ந்த இவரது தந்தை யூனுஸ் ஷேக் அகமத் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராகவும், தாய் அதீலா ஷேக் விவசாயக் கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றினர். குடும்பத்தில் நிலவிய வறுமை, மதுப்பழக்கம் மற்றும் குடும்பப் பிரச்சினைகளுக்கு இடையே, இவரது இரண்டு சகோதரிகளுக்குச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், அன்சாரின் கல்விச் செலவுக்கும் குடும்பப் பராமரிப்புக்கும் உதவுவதற்காக இவரது தம்பி அனீஸ் தனது 7-ஆம் வகுப்பிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு மெக்கானிக் கேரேஜில் வேலைக்குச் சேர்ந்தார்.
இத்தகைய சவாலான சூழ்நிலையிலும் படிப்பில் சிறந்து விளங்கிய அன்சார், 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 91% மதிப்பெண்களும், புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில் அரசியல் அறிவியல் இளங்கலைப் படிப்பில் 73% மதிப்பெண்களும் பெற்றார். தொடர்ந்து UPSC தேர்வுக்குத் தயாராகத் தொடங்கிய அவர், தினமும் 12 முதல் 15 மணி நேரம் வரை தீவிரமாகப் படித்தார். இவரது ஏழ்மை நிலையைக் கண்ட பயிற்சி மையம் கட்டணத்தில் விலக்கு அளித்ததோடு, நண்பர்களும் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் ஆதரவளித்தனர். 3 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு, 2016-ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 361-வது ரேங்க் பெற்று, 21 வயதில் இந்தியாவின் மிக இளைய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவெடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
2016-ஆம் பேட்ச் மேற்கு வங்க கேடரைச் சேர்ந்த அன்சார் ஷேக், அம்மாநிலத்தில் ஜார்கிராம், கூச்பெஹார், மால்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் வேளாண்மைத் துறையிலும் சேவையாற்றியுள்ள இவர், 2026 மே மாதம் முதல் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். அன்சார் ஷேக்கின் மனைவி வைஜா அன்சாரி இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். வறுமை சூழ்ந்த பின்னணியிலிருந்து வந்தாலும், உறுதியான எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அன்சார் ஷேக்கின் வெற்றிப் பயணம் இன்றளவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
