LATEST NEWS
“செத்துப்போவாங்கன்னு சொல்லலையே” சாவே வராதுன்னு தானே சொன்னேன்… சர்ச்சைக்கு ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ட்விஸ்ட்..!!
தமிழகச் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், அரசியல் விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் மக்கள் அதை கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார். “திமுகவின் மூத்த உறுப்பினர் ஒருவர், மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக ‘நல்ல சாவே வராது’ எனப் பேசியுள்ளார். இத்தனை காலம் வாக்களித்த மக்களைப் பார்த்து எப்படி இப்படிப் பேச முடிகிறது? மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் கொண்டுவந்த மருத்துவமனை வசதிகளைப் பட்டியலிட்டார். “அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களும் அவர்களின் உறவினர்களும் வாக்களித்திருந்தாலே திமுக வெற்றி பெற்றிருக்கும்; அப்படி வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது” என்று அவர் கூறியிருந்த பேச்சே சட்டப்பேரவையில் விஜய் எழுப்பிய விமர்சனத்திற்குக் காரணமாக அமைந்தது.
தன் பேச்சுக்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட முக்கியச் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்துப் பேசாமல், முதல்வர் விஜய் விஷயத்தைத் திசைதிருப்புகிறார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெம்பில்லாமல் சட்டப்பேரவையில் கபட நாடகம் ஆடிவிட்டு அவர் சென்றுவிட்டார்” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து தனது பேச்சு குறித்து விளக்கிய அவர், “உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது இயல்பானதுதான், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் யாரும் இறந்துபோவார்கள் என்று சொல்லவில்லை, ‘சாவே வராது’ என்றுதான் கூறினேன். அவர்கள் அனைவரும் நீண்ட காலம் நல்லபடியாக வாழ்ந்து, இந்த ஆட்சியில் நடக்கும் அனைத்துக் கொடுமைகளையும் முழுமையாகப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அப்படிப் பேசினேன்” எனத் தெரிவித்தார்.
