LATEST NEWS
“ஸ்கிரிப்ட் படிச்சு பேசுறதை நிறுத்துங்க..! தெம்பும் திராணியும் இருந்தா நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..?” முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி ஓபன் சேலஞ்ச்! பரபரக்கும் தமிழக அரசியல்..!!
இன்றைய முதல்-அமைச்சர் இந்த ஆட்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல எதுவுமில்லாத காரணத்தால் அவர் பிறப்பதற்கு முன்பு சொல்லப்பட்ட குற்றச்சாட்டை எடுத்து வந்து இப்போது பேசியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த 116 நாள் ஆட்சியில் நடைபெற்றுள்ள கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றி ஆதாரங்களோடு நேருக்கு நேராக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினார். அவை எதற்கும் பதில் அளிக்க யோக்கியதை இல்லாமல், தைரியமில்லாமல், செத்த பாம்பை அடிப்பது போல முடிந்து போன சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியுள்ளார். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் பேச்சுரிமையோ, பத்திரிகை சுதந்திரமோ இல்லை. அந்தக் காலக்கட்டத்தில் இந்த ஆணையத்தை அமைத்த இந்திரா காந்தி கூட 1980-ல் கடற்கரைக்கு வந்து, அவசர நிலையின்போது தனக்கு தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டதாகக் கூறி கலைஞருக்கு முன்னால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அவருக்கு உண்மையில் தெம்பும் திராணியும் இருந்தால், அவர் வார்த்தைகளில் ஏதேனும் உண்மை இருந்தால், எங்களுடன் சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்கத் தயாரா? புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். தான் அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்; ஆனால் எந்த வழக்கும் போட முடியவில்லை. கலைஞர் அல்லது திமுக ஏதேனும் தவறு செய்திருந்தால் எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால ஆட்சியில் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்கலாம். முதல்-அமைச்சர் விஜய் தனது ரசிகர்களுக்காக பேசி உள்ளார் அவ்வளவே. தமிழ்நாட்டின் தரம், மாண்பு, பாரம்பரியம் மற்றும் சட்டமன்ற மரபுகள் அனைத்தும் இன்று மாண்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீறப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமலேயே விஜய் பேசுகிறார்.
இன்று காலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்; நேற்று ஆளும் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் இதையெல்லாம் பேச வேண்டிய நேரத்தில், முதல்-அமைச்சர் விஜய் இப்பிரச்சினைகளை திசைதிருப்பும் வேலையைச் செய்கிறார்; இதுவொரு “திசைதிருப்பல்” தந்திரமாகும். 1989 சட்டமன்ற நிகழ்வு குறித்தும் ஜெயலலிதா குறித்தும் பேச விஜய்க்கு எந்த யோக்கியதையும் இல்லை. ஆணித்தரமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல், திராணி இல்லாமல் இன்றைக்கு ஒரு கபட நாடகத்தையும், திசைதிருப்பும் முயற்சியையும் சட்டசபையிலே அரங்கேற்றிவிட்டு ஓடியிருக்கிறார் தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை எல்லாம் முதல்-அமைச்சர் தெரிந்து கொண்டு பேச வேண்டும். சும்மா யாரோ ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்ததை வைத்து பேசக்கூடாது.
