LATEST NEWS
யாருப்பா இவரு… ரூ.90 லட்சத்தை வேணாம்னு சொல்லிட்டு மாடியில் செஞ்ச புதுமை பிசினஸ்… இப்போ மாசம் ரூ.12 லட்சம் கல்லா கட்டுறாரு..! கார்ப்பரேட் வேலையை விட்டுட்டு விவசாயத்தில் இறங்கிய சண்டிகர் இளைஞரின் மாஸ் ஸ்டோரி..!!
கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற சண்டிகரைச் சேர்ந்த மோஹித் நிஜவான், ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துறந்தார். பலருக்கும் கனவு வேலை போல இருக்கும் அந்த உயர் பதவியை உதறித் தள்ளிய அவர், முற்றிலும் மாறுபட்ட துறையான உள்ளரங்கு விவசாயத்தில் கால் பதித்தார். பெரிய அளவில் முதலீடு செய்யாமல் வெறும் ரூ.30,000 முதலீட்டில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள 100 சதுர அடி சிறிய அறையில் மைக்ரோகிரீன்ஸ் வளர்க்கத் தொடங்கினார். ஆரம்பக் கட்டத்தில் விவசாய நுணுக்கங்கள் முதல் வாடிக்கையாளர்களைக் கண்டறிவது வரை அனைத்தையும் சுயமாகக் கற்றுக் கொண்ட இந்த சிறிய முயற்சியே இன்று ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ என்ற பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.
ஆரம்பத்தில் வெறும் மூன்று ரேக்குகள், தட்டுகள், வளர்ப்பு விளக்குகள் மற்றும் விதைகளைக் கொண்டு செங்குத்து உள்ளரங்கு விவசாயத்தை தொடங்கிய மோஹித், மரபணு மாற்றப்படாத மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை முறையில் 21 வகையான ஆர்கானிக் மைக்ரோகிரீன்ஸ்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது இவரது வணிகம் பல மடங்கு விரிவடைந்து, 500 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன வசதிகள் கொண்ட பண்ணையாக மாறியுள்ளது. இங்கு சுமார் 60 ரேக்குகள் அமைக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 தட்டுகள் வரை மைக்ரோகிரீன்ஸ் உற்பத்தி செய்யும் அளவுக்கு தொழில் நுட்பமும் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ நிறுவனம் மூலம் மோஹித் நிஜவனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்து வருகிறது. இதன் மூலம் ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.1.44 கோடியை ஈட்டி வருகிறார். ரூ.30,000 முதலீட்டில் தொடங்கி கோடீஸ்வரராக உயர்ந்த இவரது இந்த வெற்றிக் கதையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
