CRIME
தந்தையைக் கொன்றவரை.. 17 ஆண்டு கழித்துப் பழிதீர்த்த கல்லூரி மாணவர்… த.வெ.க. பிரமுகர் படுகொலையில் அதிர வைக்கும் பின்னணி.!!
சென்னையில் தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அடையாறைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிமுக வட்டச் செயலாளரான கண்ணன், சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்து ஐடி நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இக்கொலைக்கு 17 ஆண்டு கால குடும்பப் பகை காரணம் என்பது வெளிவந்துள்ளது. கடந்த 2009-ல் பரணியின் பெரியப்பா சிவாவும், 2016-ல் அவரது தந்தை வேலுவும் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் கண்ணனுக்கு முக்கியப் பங்கு இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் தங்களிடம் நேரில் வந்து சமாதானம் பேசியபோதும், தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்குப் பழிவாங்கக் காத்திருந்த பரணி, த.வெ.க.வில் இணைந்து கண்ணன் அப்பகுதியில் பெரிய ஆளாக வலம் வந்த ஆத்திரத்தில் இந்த கொலையைச் செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலையான கண்ணன் ஏற்கனவே ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதால், அவரது குற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தவறியதாகக் கூறி அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகிய இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அரசியல் பழிவாங்கக் கொலைச் சம்பவம் தற்போது சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
