LATEST NEWS
காதலி 0% வட்டி தான் தருவாள்… மார்க்கெட்டிங் என்ற பெயரில் பெண்களை இப்படியா இழிவுபடுத்துவது…? சென்னை மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்ட சர்ச்சை போஸ்டர்… உடனே அகற்றக் கோரி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அதிரடி அறிக்கை..!!
சென்னை மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்டுள்ள ஒரு சர்ச்சைக்கரிய விளம்பரம், தற்போது சமூக வலைத்தளங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மெட்ரோ ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இந்த விளம்பரத்தில், பெண்களையும் ‘பிக்சட் டெபாசிட்’ திட்டத்தையும் மிகவும் விசித்திரமான முறையில் ஒப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தது. இதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
அந்த மெட்ரோ விளம்பரப் பலகையில், “காதலி ஒருவேளை 0% வட்டி தரலாம்… ஆனால் எங்களது பிக்சட் டெபாசிட் 14.40% வட்டி தருகிறது” என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகம் வெளியானதுமே, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் சித்தரிக்கப்படுகிறதா என்ற சர்ச்சை வெடித்தது.
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது X தளத்தில் இந்த விளம்பரத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்தில் பெண்களை ஒரு பொருளாகச் சித்தரிக்கும் வகையில் இதுபோன்ற விளம்பரங்கள் இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக இந்த விளம்பரத்தை அகற்ற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் இடம் பெறாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
