LATEST NEWS
ஆதாரமே இல்லாமல் CM விஜய் பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்குங்க.. சட்டமன்றத்தில் எ.வ.வேலு ஆவேசம்.. சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன?..
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், முந்தைய திமுக அரசு மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து ஆதாரம் இல்லாமல் பேசிய உரைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் 65 நிமிடங்கள் ஆற்றிய உரையில் முந்தைய திமுக அரசின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய எ.வ.வேலு, “இறந்தவர்கள் பற்றிப் பேரவையில் பேசக் கூடாது; ஆனால் அதை நேற்று முதலமைச்சர் பேசினார். முரசொலி மாறன் பற்றி அவையில் பேசியது தேவையற்றது” என்று சுட்டிக்காட்டினார். தற்போதைய முதலமைச்சருக்கு மாறன் குடும்பம் மிகவும் நெருக்கமானது என்றும், அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் குறிப்பிட்ட எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய் எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெளியில் உள்ள நபர்களைப் பற்றிப் பேசியுள்ளதால், அந்தப் பதிவுகள் அனைத்தையும் உடனடியாக அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனச் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
