LATEST NEWS
ரஷ்யாவில் சிக்கிய நொய்டா வாலிபர்.. உக்ரைன் போருக்கு அனுப்புவார்களோ என குடும்பத்தினர் அச்சம்.. வைரலாகும் கண்ணீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சந்தன் குப்தா, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கான்பூரைச் சேர்ந்த சந்தன் குப்தா, நொய்டா செக்டார் 62-ல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் தனது மனைவி மற்றும் 10 வயது மகனுடன் மாஸ்கோவிற்குச் சென்று அங்கு வசித்து வந்துள்ளார். ‘மாஸ்கோ தினக்’ கொண்டாட்டங்களின் போது அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது மாஸ்கோவில் தவித்து வரும் அவரது மனைவி குப்தா, சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தனது கணவரை மீட்கக் கோரி கண்ணீருடன் உதவி கோரியுள்ளார். தங்களுக்கு உள்ளூர் மொழி தெரியாததால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், தனது கணவரை ரஷ்யப் போலீஸார் கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து விடுவார்களோ என்ற கடுமையான அச்சம் தனக்கு உள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தங்களது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், ரஷ்ய உள்ளூர் அதிகாரிகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாகவும், தற்போது இந்த வழக்கு அங்குள்ள சட்ட நடைமுறைகளின்படி விசாரணையில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியப் பொறியாளரைப் பத்திரமாக மீட்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
