CRIME
அடக்கொடுமையே… நள்ளிரவு பார்ட்டிக்குத் தடை போட்ட மாமனார்… பழைய வேலைக்காரனுடன் சேர்ந்து மருமகள் போட்ட கொடூர பிளான்..! கான்பூரை உலுக்கிய படுகொலை பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் பகுதியில் அமைந்த ரத்தன் ஆர்பிட் குடியிருப்பில் வசித்து வந்த 63 வயதான மருந்து அதிபர் வினீத் மனோசா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மருமகள் ஷாலுவே கொலையைத் திட்டம் தீட்டி நடத்தியது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாமனார் வினீத் மனோசா தன் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாலும், அதிக செலவுக்குப் பணம் தராததாலும், நள்ளிரவு பார்ட்டிகளுக்குச் செல்லத் தடை விதித்ததாலும் ஆத்திரமடைந்த ஷாலு, தன் வீட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாமனார் தன்னைக் கண்காணித்து வந்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காகத் தங்கள் வீட்டின் பழைய வேலைக்காரரான விஷால் கௌதம் என்பவருக்கு ரூ.6 லட்சம் கொலைக்கூலி கொடுத்துக் கொலையைச் செய்ய ஒப்படைத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு வினீத் மனோசாவின் மகனும் மருமகள் ஷாலுவும் குழந்தையுடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், மாமனார் வீட்டில் தனியாக இருந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஷாலு, விஷாலுக்கும் அவரது உதவியாளரான ராஜ்கிஷோருக்கும் வீட்டின் டூப்ளிகேட் சாவியைக் கொடுத்து, வீடு காலியாக இருப்பதாக மெசேஜ் அனுப்பியுள்ளார். பாதுகாப்பு ஊழியர்களிடம் அவர்கள் மருந்து கொடுக்க வந்திருப்பதாகத் தெரிவித்து வீட்டிற்குள் செல்ல அனுமதி பெற்ற விஷாலும் ராஜ்கிஷோரும், படுக்கையறையில் ஒளிந்து கொண்டனர். வினீத் மனோசா திரும்பியதும், அவர்கள் திடீரெனத் தாக்கி கத்தியால் 26 முறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். உண்மையில் இக்கொலையை மாரடைப்பு போலக் காட்ட தலையணையால் அமுக்கிக் கொல்லத் திட்டமிட்டிருந்த போதிலும், அது கைநழுவி கத்திகுத்தாக மாறியது.
அதிகாலை 3 மணியளவில் மகனும் மருமகளும் வீடு திரும்பியபோது, ரத்த வெள்ளத்தில் வினீத் மனோசா பிணமாகக் கிடப்பதைக் கண்டு போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கல்யாண்பூர் போலிஸார், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை வைத்து விசாரணை நடத்தியதில் பழைய வேலைக்காரன் விஷால் மற்றும் ராஜ்கிஷோர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களைக் கைது செய்தனர். விசாரணையில், கொலை நடந்த அன்று இரவு ஷாலுவிற்கும் விஷாலுக்கும் இடையே 14 முறை தொலைபேசி அழைப்புகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருமகள் ஷாலுவைக் கைது செய்த போலிஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்; மேலும் இதில் மகனின் பங்கு குறித்து அனைத்துக் கோணங்களிலும் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
