CRIME
அடப்பாவிங்களா… குடும்பமே இந்த பிசினஸ்தானா..? தந்தை, அக்காவைத் தொடர்ந்து 75 லிட்டர் மதுபானத்துடன் ரயிலில் சிக்கிய பெண்… பீகாரை உலுக்கிய ஃபர்ஸ்ட் கிளாஸ் AC மதுபானக் கடத்தல் பிளான்..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் இரயில் நிலையத்தில், புதுடெல்லியிலிருந்து ஜெயநகர் நோக்கிச் சென்ற சுதந்திரதா சேனா எக்ஸ்பிரஸ் இரயிலின் முதலாவது ஏசி பெட்டியில் இருந்து 75 லிட்டர் மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசியத் தகவலின் பேரில் ஆர்.பி.எஃப், ஜி.ஆர்.பி மற்றும் சி.ஐ.பி ஆகிய படைகள் இணைந்து நடத்திய சோதனையின் போது, இரயில் பெட்டியின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் திறந்து பெண்ணின் பைகள் மற்றும் பிரீஃப்கேஸை ஆய்வு செய்தபோது பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த சுமார் 75 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட அப்பெண் நேஹா குமாரி என்ற நேஹா ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் விசாரணையில், நேஹா இந்த மதுபானப் பார்சலை தர்பங்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள சிலருக்கு விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் திட்டமிடப்பட்ட மதுபான விநியோக நெட்வொர்க் உள்ளதா என்றும், இந்த மதுபானங்களை அவருக்கு சப்ளை செய்தது யார் என்றும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேஹாவும் அவருடைய சகோதரிகளும் தர்பங்காவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததும், அவருடைய சகோதரிகளில் ஒருவர் மீது ஏற்கனவே மாவட்டத்தில் மதுபானம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், விவசாயம் செய்து வரும் நேஹாவின் தந்தை பங்கஜ் குமார் ஜா என்பவரும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுபான வழக்க ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்தார் என்றும், இவரது தாய் அங்கன்வாடி ஊழியராகப் பணியாற்றி வருகிறார் என்றும் அறியப்படுகிறது. இருப்பினும், குடும்பத்தினர் மீதான பழைய வழக்குகள் நேஹாவின் தற்போதைய குற்றச்சாட்டிற்கு நேரடி ஆதாரமாகாது என்று காவல் துறை தெரிவித்துள்ளது. நேஹாவுக்கு இதுவரை எந்தப் பழைய குற்றப் பின்னணியும் இல்லை. அதேவேளையில், மது விநியோக நெட்வொர்க்கில் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் வசதி படைத்த சிலருடன் நேஹாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், இந்த மதுபானத்தின் ஆதாரம் மற்றும் அதனைப் பெறவிருந்த நபர்கள் குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
