CRIME
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! சாக்குமூட்டையில் மீட்கப்பட்ட 7 வயது சிறுமி… CCTV-யில் சிக்கிய பகீர் காட்சி..!! நொய்டாவில் நடுங்க வைக்கும் பின்னணி..!!
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஈகோடெக்-3 காவல் எல்லைக்குட்பட்ட ஹல்தோனி கிராமத்தில், 6 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவில் இருந்து சிறுமி காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சிறுமியைத் தேட 5 சிறப்புப் படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
தேடுதல் வேட்டையின் போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதில், ஒரு வாலிபர் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்வதும், சிறிது நேரத்திற்குப் பிறகு அதே வாலிபர் ஒரு சாக்குமூட்டையைச் சுமந்து கொண்டு செல்வதும் பதிவாகியிருந்தது. அந்த சாக்குமூட்டைக்குள் சிறுமியின் சடலம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அருகில் உள்ள வயல்வெளியில் சாக்குமூட்டைக்குள் இருந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பிரதான சந்தேக நபர் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் என இருவரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஏதேனும் இழைக்கப்பட்டதா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று சென்ட்ரல் நொய்டா டிசிபி ஷைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினரும் கிராம மக்களும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
