LATEST NEWS
“வயிறு வலிக்குதா… இந்தா மருந்து…” டாக்டர் கோர்ட்டுக்கு போன கேப்பில் ஓட்டுநர் செய்த காரியம்..! தீயாய் பரவும் வைரல் வீடியோ.!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்ஷி ராம் இணைந்த மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அதிகாரி ராம்கேஷ் நீதிமன்றப் பணி காரணமாக வெளியே சென்றிருந்த நேரத்தில், அவரது ஓட்டுநரான தேவ் என்பவர் மருத்துவர் போல செயல்பட்டு நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து மருந்துச் சீட்டுகளை எழுதியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெளிநோயாளிகள் பிரிவில் அமர்ந்திருந்த அந்த ஓட்டுநர், சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் வயிற்று வலி மற்றும் பிற உபாதைகள் குறித்துக் கேட்டறிந்து, அவர்களுக்கு மருந்துகளைக் குறித்துக் கொடுத்துள்ளார். மேலும், சில நோயாளிகளை மருத்துவமனைக்கு வெளியே உள்ள மருந்தகங்களில் சென்று மருந்துகளை வாங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்றோ தகுதியோ இல்லாத ஒருவர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து மருந்துகளை பரிந்துரைத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அலட்சியப் போக்கு மீண்டும் தொடர்ந்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறையில் வழக்குப்பதிவு செய்வது உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் கண்காணிப்பு குறித்து இச்சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
