LATEST NEWS
பகீர் மர்மம்..! வெளியே பூட்டப்பட்ட கதவு… தூக்கில் தொங்கிய NEET மாணவி… போன் சாட்டில் வெளிவரப் போகும் திடுக்கிடும் உண்மைகள்..?!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் நகரில் உள்ள ஷ்யாம் சினிமா சாலையில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி NEET தேர்வுக்குப் படித்து வந்த 20 வயதான மாணவி உஜாலா குமாரி, தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த நகரக் காவல் துறையினர், மாணவியின் அறை வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அறை வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், இது தற்கொலை அல்ல; தனது மகள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெற்றோரும் உறவினர்களும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
உயிரிழந்த உஜாலா குமாரி சித்வாலியா காவல் எல்லைக்குட்பட்ட சரேயா பஹாத் கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத் சர்மா என்பவரின் ஒரே மகளாவார். லேத் மெஷின் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் அவரது தந்தை, மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற கனவோடு கோபால்கஞ்சிற்கு அனுப்பிப் படிக்க வைத்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அங்கு தங்கி பி.எஸ்சி (B.Sc) படிப்புடன் இணையவழியில் NEET தேர்வுக்கும் பயிற்சி பெற்று வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தடம் அறிவியல் குழுவினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தடயங்களையும் கைரேகைகளையும் சேகரித்துள்ளனர். மாணவியின் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டு, அழைப்பு விவரங்கள் மற்றும் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் செல்போன் தடயவியல் ஆய்வுக்குப் பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும், காவல்துறை அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
