CRIME
“அம்மாவ விட்டுடுப்பா…” கதறிய பிஞ்சுக் குழந்தைகள்..! பெத்த புள்ளைங்க கண்ணெதிரேயே பெண்டாட்டியைக் கொன்னுட்டு தற்கொலைன்னு நாடகமாடிய லாரி டிரைவர்…! மொராதாபாத்தில் அரங்கேறிய கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட மைனாத்தேர் காவல் எல்லைக்குட்பட்ட தஹார்பூர் கிராமத்தில் குடும்பத் தகராறு, சந்தேகம் மற்றும் வரதட்சணைக் கொடுமையால் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. லாரி ஓட்டுநரான பாஜில் என்பவர், போதை மற்றும் வாக்குவாதத்தின் காரணமாகத் தனது 25 வயதான மனைவி ஹுமாவை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தின் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், தனது மூன்று சிறு குழந்தைகளின் கண்முன்னேயே பாஜில் இக்கொடூரத்தைச் செய்து முடித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், உடலிலும் முகத்திலும் காயங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருமணமான சில வருடங்களிலிருந்தே பாஜிலுக்கும் ஹுமாவிற்கும் இடையே தொடர்ந்து குடும்பப் பிரச்னைகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்துவந்துள்ளன. ஹுமா மீது சந்தேகமடைந்த பாஜில், அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, ஹுமா தங்களிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றதாகக் கூறி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் அடித்துத் துன்புறுத்திய பாஜில், மறுநாள் அதிகாலையில் ஹுமாவைத் தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர் ஹுமாவின் துப்பட்டாவினாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இச்சம்பவத்தின்போது அழுதுகொண்டே தாயைக் காப்பாற்றப் போராடிய சிறு குழந்தைகளின் கதறலை அந்தப் பாவி கண்டுகொள்ளவில்லை.
கொலை செய்த பிறகு, இச்சம்பவத்தைத் தற்கொலை போலக் காட்டுவதற்காகப் பாஜில் மனைவியின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று தனது சிறு குழந்தைகளைப் மிரட்டியுள்ளார். பின்னர் அவரே மைனாத்தேர் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாகப் பொய் புகாரளித்துள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது உடலிலிருந்த காயங்கள் உண்மையை வெளிப்படுத்தின. தடயவியல் சோதனை மற்றும் மாலை வந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் இது கொலையே என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ஹுமாவின் தந்தை இப்னே ஹசன் அளித்த புகாரின் பேரில், கணவன் பாஜில், மாமனார் சாஜித், மாமியார் ரேஹானா மற்றும் மைத்துனர்கள் ஜிலானி, ரப்பானி ஆகிய 5 பேர் மீது வரதட்சணைக் கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
