LATEST NEWS
“ICU-விலும் போனை விடலையே..!” மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் மொபைல் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் … சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான 55 வயதான பாசித் அலி, மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்று மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பாசித் அலி மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி முற்றிலும் வேறொரு காரணத்திற்காகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான அந்தப் புகைப்படத்தில், பாசித் அலி தனது கண்களை மூடிக்கொண்டு படுக்கையில் இருக்கிறார். ஆனால், அவரது கையில் இருக்கும் கைபேசியின் திரைப் வெளிச்சத்துடன் இருக்கிறது. மேலும், அவர் வழக்கமாக போனைப் பயன்படுத்தும்போது பெருவிரலால் ஸ்க்ரோல் செய்வது போன்ற நிலையிலேயே அவரது விரல்கள் வைக்கப்பட்டிருந்தன. புகைப்படத்திற்காக மட்டுமே அவர் அவசர அவசரமாகக் கண்களை மூடியது போல இது இருந்ததால், புகைப்படத்தைப் பதிவு செய்வதற்காக நாடகமாடப்படுகிறதா அல்லது போட்டோ எடுப்பதற்கு முன்பாக போனை வைக்க மறந்துவிட்டாரா என இணையவாசிகள் கிண்டலாகக் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
பாசித் அலி தனக்காக வேண்டுமென்றே இப்படிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் அவர் மீது தவறு சொல்வது சரியல்ல என்றாலும், தீவிரமான மருத்துவச் சூழலில் இத்தகைய புகைப்படத்தைப் பகிர்ந்தவரது செயல் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் பாசித் அலி மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகைப்படத்தை வைத்து நகைச்சுவையான விமர்சனங்கள் தொடர்ந்தாலும், அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது.
