CRIME
பெண்கள் கவனத்திற்கு..! சைக்கிளில் பின்தொடர்ந்து வேட்டையாடும் கொடூரன்..! ராய்ப்பூர் பெண்ணின் படுகொலையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள நியூ ஸ்வாகத் விஹார் பகுதி புதர்களுக்குப் பின்னால் 35 வயது பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கை காவல்துறை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த வழக்கில் தேவந்திர சாஹு என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஜூலை 21 அன்று, வேலையிலிருந்து பணி முடிந்து தனியாக நடந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை, குற்றவாளி சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளான். ஆள் நடமாட்டமில்லாத தனிமையான இடத்தைக் கண்டதும், அவளைப் பிடித்துப் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்தும் நீருக்குள் மூழ்கடித்தும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு புதருக்குள் உடலை வீசிச் சென்றுள்ளான்.
கைது செய்யப்பட்டுள்ள தேவந்திர சாஹு, பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தவறான நோக்கத்துடன் நடந்துகொள்ளும் மனநிலை கொண்டவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சைக்கிளில் சென்று தனியாக இருக்கும் பெண்களைப் பின்தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இவன், இதற்கு முன்பும் பல பெண்களிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளான். மேலும், பெண்கள் தொடர்பான குற்ற வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறைக்கும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் சென்று வந்த பழைய குற்றப் பின்னணி கொண்டவன் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் குற்றவாளியைக் கண்டறிவது காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்த நிலையில், 8-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் பழைய குற்றவாளிகளின் விவரங்களைச் சேகரித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேவந்திர சாஹுவைக் கைது செய்த காவல்துறை, இவன் இதுவரை வேறு எத்தனை பெண்களை இவ்வாறு இலக்கு வைத்துள்ளான் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
