CRIME
மாதம் ரூ.7,000 ஜீவனாம்சம் கொடுக்கக் கடுப்பான கணவன்… நள்ளிரவில் ரகசியமாக வீட்டிற்குள் நுழைந்து அரங்கேறிய இரட்டைக் கொலை..!உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய தாய்-மகள் படுகொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானா பகுதிக்கு உட்பட்ட சந்தேதி கிராமத்தில் ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைக்கொலை வழக்கின் முடிச்சை காவல் துறையினர் வெறும் 11 மணி நேரத்திற்குள் அவிழ்த்துள்ளனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கில், மனைவி மஞ்சுவுக்கு மாதம் ரூ.7,000 ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஆத்திரமடைந்த கணவன் சத்யேந்திரா, தனது கூட்டாளி முகேஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து இந்த கொடூரக் கொலையைச் செய்ய சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
சதித்திட்டத்தின்படி, ஆகஸ்ட் 15 அன்று முகேஷ் யாதவ் மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களைக் கொண்டு சென்று மஞ்சுவுக்கும் அவரது தாயாருக்கும் கொடுத்து இருவரையும் மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் இருள் சூழ்ந்ததும் சத்யேந்திரா பின்புறக் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்து, துப்பட்டாவால் இருவரின் கை கால்களையும் கட்டியுள்ளார். தொடர்ந்து முகேஷ் தாயாரின் கால்களைப் பிடித்துக்கொள்ள, சத்யேந்திரா கத்தியால் அவரது தொண்டையை அறுத்துள்ளார். அதன்பின்னர், அங்கிருந்த அரிவாளால் தனது மனைவி மஞ்சுவின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு தப்பி ஓட முகேஷுக்கு சத்யேந்திரா ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த எட்டாவா காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான சிறப்புப் படைகள் விரைந்து செயல்பட்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கின. ஜார்புரா பகுதியில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் தப்ப முயன்ற முகேஷ் யாதவை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தபோது, அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காவல்துறையினர் தங்களது தற்காப்பிற்காகத் திரும்பச் சுட்டதில் முகேஷின் வலது காலில் தோட்டா பாய்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.2.31 லட்சம் ரொக்கம், சட்டவிரோதத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள முதன்மை குற்றவாளி சத்யேந்திராவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
