CRIME
நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! தந்தை மீது லாரியை ஏற்றி.. 300 மீட்டர் இழுத்துச்சென்று துடிக்க துடிக்க கொன்ற கொடூர மகன்… காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி.!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரைச் சேர்ந்த 50 வயதுடைய சத்யா என்பவர், தனது சொந்த மகனாலேயே மினி சரக்கு வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யாவின் இரண்டாவது மகனான 25 வயதுடைய முனுசாமி, காதலித்து திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். தனக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடம் அல்லது பணம் தந்துதவ வேண்டும் என்று கூறி, கடந்த சில மாதங்களாக முனுசாமி தனது தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று மது மற்றும் கஞ்சா போதையில் மினி சரக்கு வாகனத்துடன் வந்த முனுசாமி, மீண்டும் தந்தையிடம் பணத்திற்காக சண்டை போட்டுள்ளார். அப்போது அவருக்கும், அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த முனுசாமி, தனது தம்பி சதீஷை கொலை செய்யும் நோக்கில் அவர் மீது மினி சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இதைக்கண்ட தந்தை சத்யா, தனது இளைய மகனைக் காப்பாற்றுவதற்காக சதீஷை பக்கவாட்டில் தள்ளிவிட்டுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த மினி சரக்கு வாகனம் தந்தை சத்யா மீது பயங்கரமாக மோதியதுடன், அவரை நடுரோட்டில் சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதில் கை, கால், வயிறு என உடல் முழுவதும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சத்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையைக் கொன்றுவிட்டு வாகனத்துடன் தப்பியோடிய முனுசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
