CRIME
“இன்னும் 24 மணி நேரம்தான் டைம்..!” பெண்களை தாக்கிய அதிகாரிகள்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பீலிபித்தில், குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தப்பட்டதோடு, அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிறுமிகள் பள்ளி மற்றும் கோயில் அருகே விதிகளை மீறி அமைக்கப்பட்ட இந்த மதுக்கடையை அகற்றக் கோரிப் போராடியபோது, அப்போதைய அரசு அதிகாரிகள் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடினர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்த பீலிபித் சிறப்பு நீதிமன்றம், இந்த விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்ததோடு, அப்போதைய துணை மாவட்ட ஆட்சியர், வட்டார அதிகாரி மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட 10 அரசு அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக முதல் தகவல் அறிக்கைபதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் மாதோதண்டா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, நேர்மையான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
