CRIME
“வயலுக்குச் சென்ற வாலிபருக்கு என்னாச்சு..?” தலை நசுக்கப்பட்டு கிடந்த சடலம்.. வெளிநாட்டில் இருந்து ஆசையாய் வந்த மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் தாய்..!!
பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் – தனலட்சுமி தம்பதியின் ஒரே மகனான வெற்றிவேல் (30), கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தனது சொந்த ஊரில் புதிய வீடு ஒன்றை அவர் கட்டியுள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேச விழாவிற்காக, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அவர் ஆசையோடு ஊருக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், கவுல்பாளையம் அருகே உள்ள தங்களது சொந்த வயலுக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்ற வெற்றிவேல், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.
இதற்கிடையில், கவுல்பாளையம் கல்குவாரி பகுதியில் வாலிபர் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் உறவினர்கள் சென்று பார்த்தபோது, அது வெற்றிவேல் என்பது உறுதி செய்யப்பட்டது. யாரோ மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தகவலறிந்து வந்த மருவத்தூர் போலீசாரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித்குமாரும் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு முன்விரோதம் ஏதும் இல்லாததால், நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
