LATEST NEWS
“தேர்தலுக்கு பின் அழுது பிரயோஜனமில்லை..! அகிலேஷுக்கு தூண்டில் போட்ட ஓவைசி..! சமாஜ்வாதியுடன் கைகோர்க்க அழைப்பு..!!”
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வதைத் தடுக்கவும், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்கவும் சமாஜ்வாதியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி, “பாஜக மீண்டும் உ.பி-யில் ஆட்சி அமைப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதற்காகவே கைகோர்க்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் முடிவடைந்த பிறகு அழுது பிரயோஜனமில்லை. எங்கள் போராட்டம் நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் நடப்பதாகும். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நாற்காலியில் அமர்ந்தால், அதற்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து உரிமைகளுக்காகப் பேசவும் நாங்கள் தயார்” எனக் குறிப்பிட்டார்.
ஓவைசியின் இந்த அறிவிப்பை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. அகிலேஷ் யாதவும் ஓவைசியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் என்றும், ‘யார் பெரியவர்?’ என்ற போட்டியை ஒதுக்கிவைத்துவிட்டு தற்போது கூட்டணி பற்றிப் பேசுகிறார்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. மேலும், ஓவைசி அகிலேஷ் யாதவுக்கு ‘ஃபிரண்ட் ரிக்வஸ்ட்’ அனுப்பியுள்ளார் என்றும் பாஜக கேலி செய்துள்ளது.
