CRIME
“வழுக்கி விழுந்து சாகல!”… ரத்தவெள்ளத்தில் பாத்ரூமில் கிடந்த கணவன்.. மனைவி பகீர் வாக்குமூலம்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற அட்டை கம்பெனி தொழிலாளிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், திவ்யபாரதியின் நடத்தை மீது மணி சந்தேகம் கொண்டுள்ளார். இதனால், மணி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு, அவரை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவும் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த மணி மனைவியிடம் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறின் போது, தான் தள்ளிவிட்டதில் கணவர் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக திவ்யபாரதி முதலில் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால், சாத்தூர் தாலுகா போலீசார் நடத்திய குறுக்கு விசாரணையில், சண்டையின் போது கணவனை பாத்ரூமில் தள்ளிவிட்ட திவ்யபாரதி, கத்தியை எடுத்து மணியின் தொடையில் குத்தியது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் வெகுநேரம் இரத்தம் வெளியேறி மணி உயிரிழந்துள்ளார். உண்மையை ஒப்புக்கொண்ட திவ்யபாரதியைக் காவல் ஆய்வாளர் ராமராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை மனைவியே கத்தியால் குத்திக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
