CRIME
ரூ.500 கேட்ட இடத்துல ரூ.5,000 பறிப்பு..! கதறி அழுத வெளிநாட்டு சுற்றுலாப் பயணி… டாக்ஸி டிரைவருக்கு விழுந்த செக்..!!
பிரான்ஸ் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம், மொழியறியாமையை சாதகமாக்கி ஆக்ரா டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கூடுதல் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சைச் சேர்ந்த ஜிலியட் ஈவா மற்றும் அவரது தோழி வெரோனிகா ஆகியோர் தாஜ்மஹால் சுற்றுலாவிற்காக டெல்லி விமான நிலையத்திலிருந்து ஆக்ராவிற்கு ஆன்லைன் மூலம் ரூ.2,000 கட்டணத்தில் ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களது விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்ததால், ஆக்ராவைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநரான அஜஹருத்தீன் என்பவர் அவர்களை ஆக்ராவிற்கு அழைத்து வந்துள்ளார்.
தாஜ்மஹால் அருகே வந்ததும், ஓட்டுநர் அஜஹருத்தீன் பயணிகளை வழக்கமான நுழைவாயிலில் இறக்கிவிடாமல் வேறு பகுதியில் இறக்கியுள்ளார். அதோடு, விமானம் தாமதமானதால் விமான நிலைய பார்க்கிங் கட்டணம் கூடுதலாக ஆகியுள்ளது என்று கூறி ரூ.500 கூடுதல் பணம் கேட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்புகள் சரியாகத் தெரியாததாலும், மொழித் தடையினாலும் குழப்பமடைந்த அந்த வெளிநாட்டுப் பெண், ரூ.500-க்கு பதிலாக 50 யூரோ பணத்தை ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார்.
அங்கு நின்றுகொண்டிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் ஓட்டுநர் யூரோ நோட்டுகளை வாங்குவதைக் கவனித்து, அந்தப் பெண்களிடம் விசாரித்த போதுதான் அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்கள் அழத் தொடங்கினர். உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆக்ரா போலீசார், டாக்ஸி ஓட்டுநரை வரவழைத்து அவரிடமிருந்த 50 யூரோ பணத்தை மீட்டு அந்தப் பெண்களிடம் ஒப்படைத்தனர். சுற்றுலாப் பயணி தரப்பில் புகார் எதுவும் அளிக்கப்படாததால், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது காரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
