CRIME
கள்ளக்காதல் வெறிக்கு பலியான கணவன்..! உயிரைக் குடித்த ‘டாய்லெட் கிளீனர்’ இன்ஜெக்ஷன்… தெலங்கானாவை உலுக்கிய பகீர் கொலை..!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி மனைவி கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்பவர் ஜூன் 30-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பிரசாந்தின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாந்தின் மனைவி சந்தியா என்பவருக்கும், அனில் என்பவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பே இந்த கொலைக்குக் காரணம் என்பது தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் தெரியவந்தது.
தங்கள் கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த பிரசாந்தைக் கொல்ல சந்தியாவும் அனிலும் ஒரு சதித்திட்டம் தீட்டினர். இதற்கு வெங்கட சாய் என்பவரின் உதவியை நாடினர். திட்டத்தின்படி, கடந்த ஜூன் 29 அன்று வெங்கட சாய், பிரசாந்தை அதிக அளவில் மது அருந்தச் செய்து மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், தொலைபேசி வாயிலாக சந்தியா கொடுத்த அறிவுறுத்தலின்படி, பிரசாந்தை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் உயிர் பிழைத்ததால், அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்குத் திரும்பக் கூட்டிவந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, காதலன் அனிலின் தூண்டுதலின் பேரில், சந்தியா தனது கணவர் பிரசாந்துக்கு குழாய் வழியாக மயக்க மருந்தையும், கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் உடலில் செலுத்தியுள்ளார். மேலும், அவரை கட்டிலில் இருந்தும் கீழே தள்ளிவிட்டதால் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினரின் தீவிர விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தியா, அனில் மற்றும் வெங்கட சாய் ஆகிய மூவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
