LATEST NEWS
மருமகள் அல்ல, என் மகள்…! மாமனாராய் வந்து தந்தையாய் நின்ற நிஜ ஹீரோ..! நெட்டிசன்களை உருகவைத்த சம்பவம்..!!
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் பைராகி என்பவரின் மகன் கபில் பைராகிக்கும், பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக கடந்த 2023-ஆம் ஆண்டு கபில் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இளம் வயதிலேயே கணவனை இழந்த பிரியங்கா கடுமையான அதிர்ச்சியில் ஆழ்ந்தார். மகனை இழந்த பெரும் துயரத்திலும், தனது மருமகளின் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்பட்ட தினேஷ் பைராகி, அவளை மருமகளாகப் பார்க்காமல் தனது சொந்த மகளாக நினைத்து, அவளுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று மனதிற்குள் உறுதியான சபதம் எடுத்தார்.
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மருமகளுக்குப் பொருத்தமான ஒரு வரனை தினேஷ் தேடி வந்தார். இறுதியாக, விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் என்பவருடன் பிரியங்காவிற்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தற்போது கந்துவாவில் பணிபுரிந்து வரும் கோவிந்தின் குடும்பத்தினரை தினேஷ் நேரில் சென்று சந்தித்து, அனைத்தும் திருப்திகரமாக இருந்ததை அடுத்து இந்தத் திருமணத்தை உறுதி செய்தார்.
சமீபத்தில் போபாலில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் வேத மந்திரங்கள் முழங்க இவர்களது திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 400 விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், மாமனார் தினேஷ் பைராகி ஒரு தந்தையின் கடமையை ஏற்றுக்கொண்டு, தனது மருமகளுக்குக் ‘கன்னிகாதானம்’ செய்து வைத்தார். மேலும், இந்தத் திருமணத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் அவரே முன்னின்று ஏற்றுக் கொண்டார். விதவைப் பெண்களும் மரியாதையுடன் புதிய வாழ்க்கையை வாழ முழு உரிமை உண்டு என்பதை சமூகத்திற்கு உணர்த்தும் வகையில் அமைந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
