LATEST NEWS
மின் தடைக்கு ‘எண்ட் கார்டு’..! மின்வாரியத்தின் அதிரடி ‘ரூட் காஸ்’ திட்டம்..!மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்பட்டால் அதிகாரிகள் மீது அதிரடி ஆக்ஷன்..!!
தமிழகம் முழுவதும் ஒரே இடங்களில் தொடர்ந்து ஏற்படும் மின் துண்டிப்புகளை நிரந்தரமாகத் தடுப்பதற்காக, தமிழ்நாடு மின்வாரியம் “ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்” என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு இதுதொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். மாநிலத்தில் 3.5 கோடிக்கும் அதிகமான நுகர்வோருக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களில் தொடர்ந்து மின் தடை ஏற்படுவதை மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின்படி, கடந்த 6 மாதங்களில் அதிகளவில் மின் தடை ஏற்பட்ட பகுதிகள் மற்றும் துணை மின் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கென தனிப் பதிவேடு பராமரிக்கப்படும். வெறும் தற்காலிக சீரமைப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒவ்வொரு மின் தடைக்குமான மூல காரணத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அதற்குரிய நிரந்தர பொறியியல் தீர்வுகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம், பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வுகளுக்குத் தேவைப்பட்டால் தொழில்நுட்ப நிபுணர்கள், உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெறவும், இதற்கென மாநில அளவிலான நிபுணர் குழு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 85 சதவீதத்திற்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ள புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் கட்டமைப்புப் பணிகளை வாரந்தோறும் ஆய்வு செய்து விரைவாகப் பயன்பாட்டுக் கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரித்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
