LATEST NEWS
“காற்றே இல்லை… 40 டிகிரி வெப்பத்தில் பூட்டப்பட்ட விமானம்… போலீஸை வைத்து மிரட்டிய ஊழியர்கள்..? ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடந்தது என்ன..?!”
புது தில்லியிலிருந்து புனே சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்படப் பல பயணிகள் பயணம் செய்தனர். பயணிகள் விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே அதன் உட்புற வெப்பநிலை திடீரெனக் கடுமையாக உயர்ந்தது. இதனால் பயணிகள் அனைவரும் வியர்வையில் நனைந்து, வெப்பம் தாங்க முடியாமல் மூச்சு விடுவதற்குக் கூட மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். அசௌகரியமான சூழ்நிலை மற்றும் மூச்சுத் திணறல் இருந்தபோதிலும், விமானம் ஓடுபாதையை நோக்கி நகர்த்தப்பட்டதாகப் பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை விமானத்தைப் புறப்பட அனுமதிக்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. இருப்பினும், விமான கேப்டனும் மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளைப் பார்த்துக் கூச்சலிட்டதாகவும், தொடர்ந்து போராடினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகப் பயணிகள் கூறியதைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமடைந்தது. பின்னர் பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தங்கள் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்த விமான நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் ஸ்பைஸ்ஜெட்டின் பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்புத் தரங்கள் மீது மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
