LATEST NEWS
“கையுறை எங்கே..? தொப்பி எங்கே..?” கஃபேவில் தோசை சுட்டு காபி ஆற்றிய மத்திய அமைச்சர்… கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்..!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ‘தி ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த சமையலறைக்குள் சென்று தோசை சுட்டும், ஃபில்டர் காபி தயாரித்தும் அங்கிருந்த ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். வெள்ளை குர்தா அணிந்திருந்த அமைச்சர் சிந்தியா, சமையல் கலைஞர்களிடம் உரையாடிய பிறகு தோசைக் கல்லின் முன் நின்று தோசை மாவை ஊற்றி வட்டமாகத் தேய்க்க முயன்றார். தோசையைத் தயாரித்த பிறகு அதைச் சட்னிகளுடன் தட்டில் வைத்து, கவுண்டருக்குப் பின்னால் இருந்து வாடிக்கையாளர் ஒருவருக்கு அவரே பரிமாறினார். அதுமட்டுமன்றி, தென்னிந்தியப் பாரம்பரிய முறையில் இரு கோப்பைகளுக்கு இடையே ஃபில்டர் காபியை ஆற்றி நுரை வரவழைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
இந்த அனுபவம் குறித்த வீடியோக்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்த சிந்தியா, உணவகத்தின் சமையலறைக்குள் என்ன நடக்கிறது என்ற மாயாஜாலத்தைப் பார்க்கத் தன்னால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். திறமையான சமையல் கலைஞர்களின் மேற்பார்வையில் தோசை சுட முயன்றதாகவும், வெளியில் இருந்து பார்ப்பதை விட இதற்குள் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சமையலறை ஊழியர்களின் பணியைப் பாராட்டிய அவர், காபி தயாரித்த வீடியோவிற்கு “எனக்கான ஃபில்டர் காபி சரியாகச் செய்யப்பட்டுள்ளது” என்றும் பதிவிட்டிருந்தார்.
https://www.instagram.com/reel/Ddlmh0esHoy/?utm_source=ig_web_button_share_sheet
சிந்தியாவின் இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இணையவாசிகளிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் அமைச்சரின் இந்த ஜாலியான முயற்சியைப் பாராட்டிய போதிலும், பலர் சமையலறை சுகாதாரத்தைக் கேள்வி எழுப்பினர். உணவைக் கையாளும் போது கையுறைகள் மற்றும் தலைக்கவசம் அணியாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உணவகத்தின் தோசை சுவைக்கு நெய்யே காரணம் என்றும், இந்த உணவகம் அளவுக்கு அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் சில பெங்களூருவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
