CRIME
“இது என்னோட ஃபர்ஸ்ட் ஸ்கேம்… ஜஸ்ட் ஃபன்னுக்கு பண்ணேன்..!” ஒரே நாளில் குவிந்த ரூ.1.5 லட்சம் நிதியுதவி… வசமாக மாட்டிவிட்டு நேரலையில் நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!
X’ சமூக வலைதளத்தில் ஜெய்சிங் ராத்தோர் என்பவர், தனது 12 வயது தங்கைக்குக் கண்புரை நோய் மற்றும் விழித்திரை ரத்தக்கசிவு இருப்பதாகவும், அவருக்குப் பார்வை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறி செப்டம்பர் 21 அன்று ஒரு பதிவை வெளியிட்டார். தன்னை 16 வயது சிறுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், சிகிச்சைக்காக ஏற்கனவே தனது குடும்பம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் செலவழித்துவிட்டதாகவும், அடுத்த கட்ட அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் தாராளமாக நிதி உதவுமாறு கோரினார். தங்களின் சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள ‘ஷ்ராஃப் ஐ சென்டர்’ வழங்கிய மருத்துவ ஆவணங்கள், மருந்துச் சீட்டு மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றைப் படங்களாகப் பகிர்ந்தார். இந்த பதிவைப் பார்த்த பலர் நிதியுதவி அளித்ததில், வெறும் 24 மணி நேரத்திற்குள் ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் நிதி திரண்டது. அதன்பின் தேவைக்கு அதிகமான பணம் சேர்ந்துவிட்டதாகக் கூறி, அவர் வங்கி விவரங்களை நீக்கிவிட்டு பதிவையும் அழித்தார்.
இந்த விவகாரம் குறித்து உண்மையைக் கண்டறிய நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஷ்ராஃப் ஐ சென்டரைத் தொடர்புகொண்டு பேசியபோதுதான் இது ஒரு போலிப் பிரச்சாரம் என்பது தெரியவந்தது. அது தொடர்பான ஆடியோ உரையாடல் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, ஷ்ராஃப் மருத்துவமனை நிர்வாகம் ஒரு பகிரங்க எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. அதில், தங்கள் மருத்துவமனையின் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ ஒரு நபர் போலி மருத்துவ அறிக்கைகளையும் மதிப்பீட்டுச் சீட்டுகளையும் தயாரித்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டி வருவதாக எச்சரித்தது. மருத்துவமனையின் இந்த அறிவிப்பு ‘X’ பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், ஜெய்சிங் ராத்தோர் பகிர்ந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘X Spaces’ நேரலை விவாதத்தில் ஜெய்சிங் ராத்தோர் கலந்துகொண்டார். அவரிடம் சமூக வலைதளப் பயனர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியபோது, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். தனது தங்கையின் பெயரைக் குறிப்பிட்டது பொய் என்றும், நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தந்தையின் சிகிச்சைக்காகவே இப்படிச் செய்ததாகவும் கூறினார். மேலும், தான் வாங்கிய பணத்தை நன்கொடையாளர்களுக்குத் திருப்பி அனுப்பி வருவதாகக் கூறி, அதற்கான வங்கிப் பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்தார். நேரலையின் போது, தான் இதை விளையாட்டுக்காகச் செய்ததாகவும், இதுவே தனது முதல் மோசடி என்றும் அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பல மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தை ‘X’ பயனர்கள் ‘தேநீர் விவாதம்’ என இணையத்தில் விமர்சித்தனர்.
