DISTRICT NEWS
“பாரிக்கு தேர்… இந்த ஆசிரியருக்கு மொபட்!”.. குருவிக்காகத் தன் வாகனத்தையே தியாகம் செய்த மனிதர் … குவியும் பாராட்டு..!!
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனைப் போல, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் என்ற 55 வயது நபர், சிட்டுக்குருவிக்காகத் தனது மொபட் வாகனத்தையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளரான இவர், கடந்த 25 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் படிக்கட்டுகளுக்குக் கீழே மொபட்டை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, மொபட்டின் கைப்பிடிக்குக் கீழே உள்ள பெட்டியில் சிட்டுக்குருவி ஒன்று அழகாகக் கூடு கட்டியிருப்பதை கவனித்தார். பறவையின் கூட்டை கலைக்க மனமில்லாத அவர், அன்று முதல் தனது மொபட்டைப் பயன்படுத்தாமல் தான் நிறுத்திய இடத்திலேயே அப்படியே விட்டுவிட்டார்.
இறைவேதத்தில் உள்ள “தாய்க்குருவியையும் அதன் குஞ்சுகளையும் பிரிக்கக் கூடாது” என்ற வசனத்தை நினைவுகூர்ந்த கிறிஸ்டோபர், அந்தக் கூட்டைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். இதற்கிடையில் அந்தச் சிட்டுக்குருவி இரண்டு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்த நிலையில், கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஒரு முட்டை குஞ்சு பொரித்துள்ளது. தற்போது தாய்க்குருவி தனது குஞ்சுக்குத் தினமும் இரை கொண்டு வந்து ஊட்டி வருகிறது. மற்றொரு முட்டையும் குஞ்சு பொரித்து, அந்தப் பறவைகள் அனைத்தும் பறந்து செல்லும் வரை தனது மொபட்டை எடுக்கப் போவதில்லை என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிட்டுக்குருவியின் வாழ்வாதாரத்திற்காகத் தனது வாகனத்தையே விட்டுக்கொடுத்த இவரது அசாத்திய மனிதநேயத்தையும் ஜீவகாருண்யத்தையும் அப்பகுதி மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
