CRIME
பாசமாவது.. பந்தமாவது.. சொத்துக்காக உடன்பிறந்த தங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. மிளகாய் பொடி தூவி அண்ணன் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, சொத்து தகராறில் உடன்பிறந்த தங்கையையே மிளகாய் பொடி தூவி கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே வசித்து வந்த தீபா என்பவரின் பெயரிலும், அவரது மகன்கள் பெயரிலும் தந்தை ராஜேந்திரன் 80 சென்ட் நிலத்தை தானமாக எழுதி வைத்துள்ளார். இந்த நிலத்தைத் தனக்கு எழுதித் தருமாறு தீபாவின் அண்ணன் காந்தகுமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் நீண்ட நாட்களாகப் பகை நீடித்து வந்துள்ளது. சம்பவத்தன்று காந்தகுமார் 6 பேர் கொண்ட கும்பலுடன் தங்கை தீபாவின் வீட்டிற்குச் சென்று சொத்து தொடர்பாக மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தகராறு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே, காந்தகுமார் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியைத் தீபாவின் முகத்தில் தூவி, கூரிய ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தீபா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தடுத்த தீபாவின் கணவர் பாபுவையும் அந்த கும்பல் கொடூரமாகத் தாக்கியதில், அவரது கைகள் துண்டிக்கப்பட்டு தலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சங்கராபுரம் போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அண்ணன் காந்தகுமார் மற்றும் அவருடன் வந்த கூலிப்படையைத் தேட டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
