CRIME
“3 மாதக் குழந்தையை விட்டுவிட்டு ஓட்டம்..!” கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி… கணவனின் மாஸ் ஸ்கெட்ச்.. திருவண்ணாமலையை உலுக்கிய கொடூர தாக்குதல்..!!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் அருகே இயங்கிக் கொண்டிருந்த அரசு பேருந்தில், இளைஞர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, கொளமஞ்சனூர் கோவில் அருகே சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போது, முன்பகையால் பின் தொடர்ந்த நபர்கள் பேருந்துக்குள் புகுந்து ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவசங்கர், உடனடியாக மீட்கப்பட்டுத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இத்தாக்குதலுக்குக் கள்ளக்காதல் விவகாரமே முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு ரேகா என்பவரைத் அவரது 3 மாதக் கைக்குழந்தை மற்றும் கணவரான ரகுவை விட்டுப் பிரித்து, சிவசங்கர் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, நீதிமன்ற வழக்கிற்காகத் திருவண்ணாமலை வந்துவிட்டு மீண்டும் பேருந்தில் திரும்பிய சிவசங்கரைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து பின்தொடர்ந்து வந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த காவல்துறையினர், இந்த வழக்கில் தொடர்புடைய முதன்மை குற்றவாளி ரகு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், ஆசைத்தம்பி, மாதவன், சுகுமார் ஆகிய 5 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாகத் திட்டமிட்டு ஆளில்லாத இடத்தில் வெட்ட நினைத்ததாகவும், பேருந்து கோவில் அருகே நின்றதால் அங்கேயே தாக்குதல் நடத்தியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பட்டப்பகலில் அரசு பேருந்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்த அரிவாள் வெட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
