CRIME
அட கடவுளே..! “பேசவும் முடியாது.. கேட்கவும் முடியாது..!” 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியக்கு ஓட்டுநர் கொடுத்த நரக வேதனை!… திடுக்கிட வைக்கும் பின்னணி..!!
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில், 15 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 26 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் லவ் குஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிக்காக மீரட்டிற்கு சென்ற பயணத்தின் போது இந்தத் தொல்லை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பயணத்தின் போது ஓட்டுநர் மாணவியை நோக்கி தகாத சைகைகள் செய்ததாகவும், பின்னரும் பள்ளியிலும் வெளியிலும் அவளைப் பார்த்தபோதெல்லாம் அருவருப்பான நடத்தை காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்காமல் இருந்த மாணவி, ஜூலை 28 அன்று தனது தோழியுடன் பயிற்சிக்கு வந்தபோது பள்ளி நிர்வாகத்திடம் நடந்தவற்றை பகிர்ந்துள்ளார். மேலும், ஓட்டுநர் தன்னைத் தொடர்ந்து பின்தொடர்ந்ததுடன், பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும், மீரட் பயணத்தின் போது தனது தொலைபேசி எண் எழுதப்பட்ட குறிப்பை வலுக்கட்டாயமாக வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநரை பணிநீக்கம் செய்துள்ளது.
மாணவியின் தாய் அளித்த தகவலின்படி, ஓட்டுநர் ஒருமுறை சிறுமியை தகாத முறையில் தொட்டதுடன், தொடர்ந்து ஆபாசமான சைகைகள் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 74 மற்றும் 351(2), போக்சோ சட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாணவியின் தொலைபேசி எண் அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
