CRIME
நள்ளிரவில் கொடூரம்..! “கழுத்தறுத்து கொல்லப்பட்ட மனைவி ” கடைசியாக வீட்டில் இருந்தது யார்.? வீட்டின் சிசிடிவி-யில் சிக்கிய முகம்…. செல்போன் டவரால் விலகிய மர்மம்..!
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சர்வேயர் ஜெயசீலன், தனது மனைவி காளீஸ்வரியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டையில் பணியாற்றி வந்த ஜெயசீலனுக்கும் காளீஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். காளீஸ்வரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் பாப்புலர் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி மாலை அவர் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.
இந்தக் கொலை வழக்கு குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காளீஸ்வரி வசித்து வந்த வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வீட்டிலிருந்து கடைசியாக காளீஸ்வரியின் கணவர் ஜெயசீலன் வெளியேறிச் சென்ற அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜெயசீலனின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்த போது, அது திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள அய்யலூர் பகுதியில் கடைசியாகச் செயல்பட்டு, பின்னர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், அவரது செல்போன் டவர் லொகேஷனைத் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
செல்போன் சிக்னல் காட்டிய லொகேஷன் அடிப்படையில், பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகர் பகுதியில் பதுங்கியிருந்த ஜெயசீலனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான ஜெயசீலனிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். குடும்பத் தகராறின் பின்னணியில் இந்தத் துயரச் சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தற்போதும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
