LATEST NEWS
“நான் ஒன்னும் ரோபோ கிடையாது” நானும் கேப்டனா இருந்தவன் தான்.. தன் மீதான விமர்சனங்களுக்கு சஞ்சு சாம்சன் கொடுத்த எமோஷனல் மற்றும் அதிரடி பதில்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். இந்த ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீதான விமர்சனங்கள் மற்றும் வெளியுலகப் பேச்சுகளைக் கையாள்வது குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், தான் ஒரு இயந்திரமோ அல்லது ரோபோவோ அல்ல என்பதால் வெளியுலகப் பேச்சுகள் சில சமயங்களில் தன்னை பாதிக்கவே செய்கின்றன என்று ஒப்புக்கொண்டார். வெளியில் நடக்கும் விவாதங்களில் இருந்து விலகி இருக்க அந்த ‘வை-ஃபை’யை அணைக்க முயன்றாலும், சில நேரங்களில் கருத்துகளைப் பார்க்க நேரிடும் போது வருத்தம் ஏற்படுவதாகவும், பின்னர் தனக்குத்தானே பேசி தெளிவடைந்து கொள்வதாகவும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டது மற்றும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் அவர் முதிர்ச்சியோடு பேசினார். 15 வயதுடைய அந்தச் சிறுவன் 700 முதல் 800 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருந்ததால், அணியின் நலன் கருதி அவரை சேர்க்க வேண்டிய சூழல் இருந்தது என்பதைத் தான் புரிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், தான் சில போட்டிகளில் எதிர்பார்த்தபடி விளையாடாததும் இதற்கு ஒரு காரணம் என்று சஞ்சு சாம்சன் நேர்மையாக ஒப்புக்கொண்டார். தானும் கேப்டனாக இருந்து இது போன்ற பல கடினமான முடிவுகளை எடுத்திருப்பதால், அணியின் நலனுக்காக எடுக்கப்படும் இத்தகைய தலைமைத்துவ முடிவுகளைத் தான் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
