LATEST NEWS
“கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் போன கதை” தவெக-வையும் சிஎம் விஜய்யையும் அக்குவேறாகப் பிரித்த திண்டுக்கல் சீனிவாசன்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசியல் சூழல் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.
அதிமுகவிலிருந்து சிலரும், பொதுமக்களில் பலரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். தவெக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என நம்பி அவர்கள் அங்கு சென்றதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அப்படி எதுவும் நடக்காது என்பதை மக்கள் புரிந்து கொண்டு, மீண்டும் அங்கிருந்து விடுபட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் கூறினார்.
தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த திண்டுக்கல் சீனிவாசன், சபையில் வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே பொதுப் பிரச்னைகள் குறித்துப் பேசப்படுவதாகவும், மற்ற நேரங்கள் சண்டை கட்டுவதற்கே சரியாக இருப்பதாகவும் சாடினார். அனுபவம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், மூன்று அமைச்சர்கள் மட்டுமே சபை விவாதங்களில் மாறி மாறிப் பேசி வருவதாகவும், யார் துறையை யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.
சபாநாயகரின் செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், சபாநாயகர் நடுநிலையோடு செயல்படாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். ஒரு அமைச்சர் தவறாகப் பேசும்போது அதைச் சுட்டிக்காட்டாமல், அதற்குப் பதிலாக ‘அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்’ என்று கூறுவது நடுநிலைமையாகாது என்றார். இறுதியாக, “முதல்வர் விஜய் அலை வீசுவதால், அவர்தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் கூறுகிறார்கள்” என்ற கேள்விக்கு, “கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் இது; விஜய் அலை எல்லாம் போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது” எனத் தனது பாணியில் ஜாடை மாடையாகப் பதிலளித்தார்.
