LATEST NEWS
இது என்ன கொடுமை..! ஆம்புலன்ஸ் கூட வர முடியல… கழிவுநீர் வெள்ளத்தில் நோயாளியைச் சுமந்து சென்ற குடும்பம்…நெஞ்சை பிழியும் வைரல் வீடியோ..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், குடும்பத்தினர் சிலர் நோயாளியை சுமந்துகொண்டு முழங்கால் அளவுக்கு மேலான தண்ணீரில் நடந்து சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அகமதாபாத் அருகில் உள்ள மணிபூர் கிராமத்தில் பெய்த கனமழையால், ஊரைச் சுற்றிலும் அனைத்துப் பக்கங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு நோயாளிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டதுடன், ஆம்புலன்ஸும் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் போனது.
மணிபூர் கிராமத்திற்கு அருகே உள்ள ரயில்வே கீழ் பாலத்தில் இடுப்பளவுக்கு நீர் தேங்கியதால், நோயாளியை அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் பாலத்தின் மறுபுறத்திலேயே நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நோயாளியின் நிலைமை மிக மோசமாக இருந்ததால், குடும்பத்தினர் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், வேறு எந்த வாகனமும் கிடைக்காத நிலையில், கழிவுநீரும் கலந்த வெள்ள நீரில் நோயாளியைத் தூக்கிக்கொண்டு ஆபத்தான வழியில் நடந்தே சென்றனர். வீடியோவில் குடும்பத்தினர் தண்ணீரின் வேகமான ஓட்டத்தைக் கடந்து, சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸை நோக்கிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது.
இந்த வேதனையான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நகரின் அடிப்படை உள்கட்டமைப்பு, வடிகால் அமைப்பு மற்றும் சாலைகளின் நிலை குறித்து அரசின் செயல்பாடுகள் மீது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், அகமதாபாத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
