LATEST NEWS
“இந்தியா ஏழை நாடே இல்லை… நம்மள ஏழையாக்குனதே இவங்க தான்..!” அமெரிக்க பெண் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெமா ஃபெரர் ஜூல்கா என்ற பெண், ஜெய்ப்பூரின் ஹவா மஹால் அருகே நின்று படம்பிடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “இந்தியா இயற்கையிலேயே ஏழை நாடு அல்ல, அது ஏழையாக்கப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார். ஒரு காலத்தில் இந்தியா உலக அளவிலான ஜவுளித் துறையின் வல்லரசாகத் திகழ்ந்தது என்றும், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி, பட்டு மற்றும் மஸ்லின் ஆடைகள் உலகிலேயே மிகச் சிறந்தவையாக இருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வர்த்தகக் கொள்கைகள் இந்திய மக்களுக்குச் சாதகமாக இல்லை என்றும், அதனாலேயே லட்சக்கணக்கான மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் அவர் விளக்குகிறார். இந்தியாவில் சிறப்பான வேலைகள் நடக்கவில்லை என்பதில்லை, ஆனால் அதன் பயன் வேறு யாருக்கோ சென்று சேர்ந்தது. மேலும், இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது, இந்தியா முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும், காந்தியடிகளின் வழிகாட்டுதலின்படி எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் அமைதியையே இந்தியா தனது முதன்மை ஆயுதமாகக் கொண்டது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜெமா ஃபெரரின் இந்த அமைதி மற்றும் வரலாற்றுச் செய்தியடங்கிய வீடியோவுக்குப் பயனர்களிடமிருந்து பெருமளவில் ஆதரவும் வரவேற்பும் குவிந்து வருகின்றன. இதைப் பார்த்த பயனர்கள் பலர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், “சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பருத்தி ஆடைகள் தயாரிக்கப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கல்வி, நடனம், இசை மற்றும் ஜோதிடம் என அனைத்திலும் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்” என்று பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளனர்.
