LATEST NEWS
“ரூ.15 லட்சம் பேரம்… ரகசிய ஆடியோ லீக்” தவெக கட்சிப் பதவிக்காக கொட்டப்பட்ட பணம்.. அதிர்ச்சியில் தவெக தலைமை..!!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் பெத்தராஜ் என்பவர், கட்சியில் புதிதாகத் இணைந்த நிலையில் தனது உறவினர் ஒருவருக்குச் சாயல்குடி நகர பொருளாளர் பதவி கேட்டுள்ளார். இதற்காக அவர் சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோரை அணுகியுள்ளார். ஆனால், கட்சியில் மிக அண்மையில் இணைந்த காரணத்தால் அவருக்குப் பதவி வழங்கப் பரிந்துரை செய்ய நிர்வாகிகள் இருவரும் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பெத்தராஜ், கடலாடி தவெக மேற்கு ஒன்றிய செயலாளராக இருக்கும் தனது மற்றொரு உறவினரான ஸ்ரீதரனைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து முறையிட்டுள்ளார். அப்போது ஸ்ரீதரன், தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி நகர பொருளாளர் பதவியைப் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ. 15 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தத் தொகை இறுதியாக ரூ. 5 லட்சம் எனப் பேரம் பேசி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் போது, தனக்குப் பதவி தர மறுத்த சாயல்குடி ஒன்றிய செயலாளர்களைக் குறித்துப் பெத்தராஜ் கடுமையான மற்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியுள்ளார். இதனை ஸ்ரீதரன் தனது செல்போனில் இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த ஆடியோ பதிவை சாயல்குடி ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் மற்றும் நகர செயலாளர் அந்தோணி மாதவடியான் ஆகியோருக்கு ஸ்ரீதரன் போட்டுக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம், தவெக கட்சி வட்டாரத்தில் தற்போது பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
