CRIME
அடப்பாவி..! சந்தேகப் பேய் பிடித்த கணவன்.. 3 பிள்ளைகளின் தாயைக் கொடூரமாகக் கொன்ற கொடூரம்.. ஆம்பூரில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சியில் கிராமம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி தம்பதியிடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதேவியின் மீது பாபு கொண்ட சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த ஸ்ரீதேவி, சில மாதங்களுக்கு முன்பு தன் கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினார். பாபு பலமுறை கூப்பிட்டும் அவர் மீண்டும் வர விரும்பவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியிடம் பேசிச் சமாதானப்படுத்திய பாபு, அவரை மீண்டும் தன்னுடன் வாழ வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அன்று இரவு உணவை முடித்துவிட்டு, இவர்களது மூன்று குழந்தைகளும் வீட்டின் மாடியில் தூங்கச் சென்றுவிட, கணவன்-மனைவி இருவரும் தரைதளத்தில் உறங்கியுள்ளனர். நள்ளிரவில் மனைவியின் நடத்தை குறித்து பாபுவுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபு, மனைவி ஸ்ரீதேவியைக் கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
மறுநாள் காலை மாடியிலிருந்து கீழே வந்த குழந்தைகள், தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஸ்ரீதேவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கணவர் பாபுவைப் பிடிக்க வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
