LATEST NEWS
“I Love You சார்..! லத்தி வேணாம்… AK-47 எடுத்துட்டு வாங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ்காரரையே சிரிக்க வைத்த… பீகார் மாணவர்களின் கலாட்டா..!!”
NEET தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பீகாரில் இருந்து வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தில்லியின் ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இதில், தீவிரமான சூழ்நிலையிலும் மாணவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே நடந்த ஒரு நகைச்சுவையான உரையாடல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரலான அந்த வீடியோவில், மாணவர்கள் ஒரு காவலரைச் சூழ்ந்து நின்று பேசுகின்றனர். அப்போது ஒரு மாணவர், “சார், நாங்கள் லத்தி அடியைப் பார்த்து சலித்துவிட்டோம்… அடுத்த முறை நீங்கள் வரும்போது AK-47 துப்பாக்கியுடன் வாருங்கள்” என்று ஜாலியாகக் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையாத அந்தப் காவலர், மிகவும் அமைதியான முறையில் கோபப்படாமல் சூழ்நிலையைக் கையாள்கிறார். நிலைமையை அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்றும் மாணவர்களுக்குப் பொறுமையாக எடுத்துரைக்கிறார்.
காவலரின் இந்த அன்பான அணுகுமுறையைக் கண்டு நெகிழ்ந்த மாணவர்கள், “சார், நீங்கள் அவ்வளவு அழகாகப் பேசுகிறீர்கள், எங்களுக்கு உங்கள் மீது காதலே வந்துவிட்டது” என்று சிரித்தபடியே பதிலளிக்கின்றனர். வழக்கமாகப் போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் போக்கே காணப்படும். ஆனால், அதற்கு மாறாக அமைந்த இந்த உரையாடல் ‘X’ தளத்தில் @ChapraZila என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
