LATEST NEWS
என்ன கொடுமை இது..! பெண்களுக்கு 6-வது வரைதான் படிப்பாம்… தலிபான்கள் போட்ட புது ரூல்ஸ்..! ஆப்கான் பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்..?!
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வி தொடர்பான நிலையைத் தெரிவிக்கும் ஆய்வறிக்கையை ஐ.நா.வின் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. அதில், பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்கக் கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கவில்லையெனில், மீள முடியாத சேதத்தை நோக்கி ஆப்கானிஸ்தான் தள்ளப்படும் என்றும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் திறமை இழப்பு, மிகக் கொடிய வறுமை, அதிகப்படியான குழந்தை திருமணங்கள் மற்றும் மீள முடியாத சேதத்தை நோக்கி அவர்கள் தள்ளப்படுவார்கள். பெண்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லவும் படிக்கவும் சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சர்வதேச அமைப்பிற்குத் தலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக, 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெண்களுக்கான இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன. அதே ஆண்டு டிசம்பரில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பது தடை செய்யப்பட்டது. இது குறித்துக் கேள்வி எழுப்பினால், இஸ்லாமியச் சட்டம் மற்றும் கலாசாரப்படியே பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுவதாகத் தலிபான்கள் கூறுகின்றனர். மேலும் ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பெண் குழந்தைகளின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தேசிய எழுத்தறிவு விகிதம் வெறும் 37 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும், பெண் சிறார்களுக்குக் கல்வி கற்பிக்கத் தடை செய்வதால் பல ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஆராய்ச்சி படிப்பு மற்றும் உயர்கல்விச் சான்றிதழ்கள் செல்லாது என அறிவித்த தலிபான்கள், சிறுவர்களுக்குப் பெண் ஆசிரியர்கள் கற்பிக்கக் கூடாது என்ற உத்தரவையும் அறிவித்துள்ளனர்.
