LATEST NEWS
ரெட் அலர்ட்! முடங்கியது தலைநகர்.. இடியும் கட்டிடங்கள்.. மழை வெள்ளத்தில் டெல்லி, மகாராஷ்டிரா!…
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் முழங்கால் அளவிற்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன், ராட்சத மரங்கள் சாய்ந்து பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் மழையின் கோரத் தாண்டவத்தால், ரோகினி பகுதியில் கட்டுமானத்தில் இருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ள நிலையில், தொடர்ந்து பெய்யும் மழையால் நகரமே அச்சத்தில் உறைந்துள்ளது.
மறுபுறம் மகாராஷ்டிராவிலும் தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவிற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஏற்பட்ட கோர வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பேரிடர்களில் சிக்கி இதுவரை 62 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். குறிப்பாக தானே, பால்கர் போன்ற மாவட்டங்களில் இயல்பை விட 400 சதவீதம் அதிக மழை கொட்டித் தீர்த்துள்ளது. டெல்லி மற்றும் மகாராஷ்டிரா என இரு முக்கிய மாநிலங்களும் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி தத்தளித்து வரும் நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் முழுவீச்சில் களமிறங்கி மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
