CINEMA
ருக்கு’வை சந்தித்த ‘குட்டி’…அன்பும் பணிவும் அப்படியே இருக்கு…விவாகரத்து விசாரணை, அரசுப் பணிகளுக்கு இடையே சிம்ரனை சந்தித்த விஜய்…25 ஆண்டுகளுக்குப் பின் நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு…!
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யை, அவரது திரையுலக வாழ்க்கையின் மிக முக்கியமான ஜோடியான நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களைத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ள சிம்ரன், “சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நமது முதலமைச்சர் விஜய்யை எனது குடும்பத்துடன் சந்தித்தேன். கோடிக்கணக்கான மக்களை ஈர்த்த அவரது அன்பும், பணிவும், பொறுப்பும் இன்னும் அப்படியே உள்ளது. மாநில முன்னேற்றத்திற்கான அவரது பேரார்வமும், தொலைநோக்குப் பார்வையும் வியக்க வைக்கிறது. அவர் தமிழ்நாட்டை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் இவ்வேளையில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மற்றும் சிம்ரன் கூட்டணியில் வெளியான ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா ஆகிய ஐந்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதுதவிர, ‘யூத்’ திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடல் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஹிட் லிஸ்டில் உள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுச் சுமார் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், சிம்ரனின் இந்தச் சந்திப்பு புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் கலெக்டர் ஆக ஆசைப்பட்ட ‘ருக்கு’ (சிம்ரன்), தனது ‘குட்டி’ (விஜய்) முதலமைச்சரான பிறகு நேரில் சென்று பார்த்துள்ளார் எனத் தங்களது சினிமா நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யைத் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தனது அன்றாட அரசு அலுவலகப் பணிகள் மற்றும் தனிப்பட்ட விவாகரத்து விசாரணை உள்ளிட்ட பல்வேறு பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும், முதலமைச்சர் விஜய் பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி நடிகை சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
