CINEMA
கார் ரேஸில் பிஸி.. சினிமாவில் சம்பளப் பிரச்சினை…லாபப் பகிர்வு (Profit Sharing) முறைக்கு மாறுவாரா அஜித்?…சினிமாவை சேவையா நினைத்து அஜித் இதை செய்யணும்…திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கொடுத்த ஓப்பன் ஐடியா…
கடந்த ஆண்டில் வெளியான இரண்டு படங்களுக்குப் பிறகு, நடிகர் அஜித்குமார் தற்போது கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்றும், அதில் ஸ்ரீலீலா கதாநாயகியாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. அஜித்தின் சம்பளப் பிரச்சினைதான் இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அரசல் புரசலாக வெளியாகும் தகவல்களின்படி, அஜித் ஆரம்பத்தில் தன் புதிய படத்திற்கு 185 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், தயாரிப்பாளர்கள் தரப்பில் அதற்கு உடன்படாததால் 150 கோடி, பின்னர் 130 கோடி எனத் தன் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழலில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் அஜித்திற்கு 90 முதல் 110 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தர சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அஜித்தின் மார்க்கெட் டல்லடித்துவிட்டதா என்று அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அஜித் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்திற்கு முக்கிய ஐடியா ஒன்றை வழங்கியுள்ளார். அவர் பேசுகையில், “தற்போது கோலிவுட்டில் அஜித்திற்கு அவர் கேட்கும் பெரும் தொகையைச் சம்பளமாகக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் முன்வருவது குறைவுதான். சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், ஏஜிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட லாபப் பகிர்வு (Profit Sharing) முறையிலேயே படம் எடுக்க விரும்புகின்றன. அஜித் ஏற்கனவே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பதால், ரசிகர்களுக்காகவும் சினிமாவுக்காகவும் ஒரு சேவையாக நினைத்து, லாபப் பகிர்வு முறையில் படங்களைச் செய்ய முன்வர வேண்டும். அப்படிச் செய்தால் ரசிகர்களுக்கு அவரிடமிருந்து தொடர்ந்து திரைப்படங்கள் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
