LATEST NEWS
உஷார்! இதை செய்தால் அபராதம் உறுதி.. ‘ரயில் ஒன்’ பயணிகளுக்கு வந்த திடீர் எச்சரிக்கை.! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!
இந்திய ரயில்வேயின் ‘ரயில் ஒன்’ செயலி மூலமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டினை ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி, இனிமேல் செல்போனில் செயலியை நேரடியாகத் திறந்து காட்டினால் மட்டுமே அந்தப் பயணச் சீட்டு செல்லுபடியாகும். அதைவிடுத்து, டிக்கெட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தோ, வாட்ஸ்அப்பில் மற்றவர்களுக்குப் பகிர்ந்தோ அல்லது PDF வடிவிலோ டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தால் அது முற்றிலும் நிராகரிக்கப்படும். அவ்வாறு செய்பவர்கள் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களாகவே கருதப் பட்டு அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். ஒரே டிக்கெட்டை ஸ்க்ரீன்ஷாட் மூலம் பலருக்கும் அனுப்பி மோசடி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதால், இந்த அதிரடி முடிவை ரயில்வே நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.
மேலும், இந்தச் செயலி மூலம் பெறப்படும் லோக்கல் டிக்கெட்டுகளுக்கான செல்லுபடியாகும் நேரம் வெறும் 2 மணி நேரமாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், பயண நேரத்திற்கு வெகு முன்பாகவே டிக்கெட் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேசமயம், சில ரயில் நிலையங்களில் இன்டர்நெட் சிக்னல் சரிவர கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, பரிசோதகரிடம் டிக்கெட்டை காட்ட வேண்டிய நேரத்தில் பதற்றத்தைத் தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே தங்களது மொபைல் செயலியில் ‘Show Ticket’ பகுதி சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.
