LATEST NEWS
நிலத்தின் விலை உயர்வால் அரசு எடுத்த விசித்திர முடிவு…”இனி எல்லாமே 15 அடுக்குகள் தான்…புதிய FSI கொள்கையை அறிவித்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…”உள்கட்டமைப்பில் புதிய புரட்சி…!
தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலப்பற்றாக்குறை மற்றும் நிலங்களின் விலை அதிகரித்து வரும் சூழலில், அரசு நிலங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தும் வகையில் புதிய எஃப்.எஸ்.ஐ (Floor Space Index) கொள்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், இனிவரும் காலங்களில் புதிய அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் குறைந்த அடுக்குகளுடன் கட்டப்படாது என்றும், அதற்குப் பதிலாக 15 அடுக்குகள் (G+15) வரை உயரமான கட்டிடங்களாகக் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எதிர்கால 40 ஆண்டுகளுக்கான தேவைகளை முன்கூட்டியே கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது நிர்வாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்பு பெரும்பாலான அரசு கட்டிடங்கள் G+2 அல்லது G+3 அடுக்குகளுடன் மட்டுமே கட்டப்பட்டு வந்ததால், முக்கிய நகரப் பகுதிகளில் உள்ள உயர் மதிப்புமிக்க அரசு நிலங்கள் பெருமளவு வீணடிக்கப்பட்டு வந்தன. நிலம் என்பது மிகவும் மதிப்புமிக்க வளம் என்பதால், அதிகப்படியான FSI-யை பயன்படுத்தி செங்குத்து வளர்ச்சியை (Vertical Development) ஊக்குவிப்பதே இப்புதிய கொள்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் குறைந்த நிலப்பரப்பில் அதிகப்படியான அரசு அலுவலகங்கள், ஊழியர் குடியிருப்புகள் மற்றும் பொது வசதிகளை ஒரே இடத்தில் உருவாக்க முடியும் என அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய மாஸ்டர் பிளான் மூலம் அரசுக்குக் புதிய நிலங்கள் வாங்கும் செலவு கணிசமாகக் குறைவதோடு, அந்தச் சேமிப்புத் தொகை மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். நகர்ப்புற மக்கள் அடர்த்திக்கு ஏற்ப நிலப் பயன்பாட்டைத் திறம்பட கையாள உதவும் இந்த உள்கட்டமைப்பு சீர்திருத்தம், தமிழகத்தை நவீன உள்கட்டமைப்பு மாநிலமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய FSI கொள்கை அமலுக்கு வந்தவுடன் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 15 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட நவீன அரசு கட்டிடங்கள் எழும்பும் என்பதால், இது தமிழக உள்கட்டமைப்பு துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
